சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து..! மாணவர்களின் நலனே முக்கியம் எனக் கூறிய மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார். சிபிஎஸ்இயின் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கிய பின்னர், இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற பரந்த மற்றும் விரிவான ஆலோசனைகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பிலிருமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா தொடங்கியபோது, 2020 மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா குறைந்த பிறகு தாமதமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. எனினும் அப்போது 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதன் பிறகு கொரோனா பல மாநிலங்களிலும் குறைந்ததால், பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டன.
எனினும் ஆன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் வாய்க்குமா என்பது கேள்விக்குறிதான். இதனால் பல மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்காத சூழல் நிலவியதால், இந்த ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு முன்னரே அறிவித்து விட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கல்லூரியில் சேர்வதற்கு முக்கியமான ஒன்று என்பதால், இது குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின்படி சரியான நேரத்தில் தொகுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (சிபிஎஸ்இ) பிரதமர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, சில மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என விரும்பினால், அவர்கள் மட்டும் தேர்வை எதிர்கொள்ள சிபிஎஸ்இ வாய்ப்பை வழங்கும். கொரோனா நிலைமை மீண்ட பிறகு, விருப்பமுள்ள மாணவர்களுக்கு தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து குறித்த முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். கொரோனா கல்வி நாட்காட்டியை பாதித்துள்ளது என்றும் வாரிய தேர்வுகள் பிரச்சினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருவதாகவும், இது முடிவுக்கு வரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ வாரிய தேர்வுகளை ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, நாங்கள் மாணவர் நலன் சார்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இது நமது இளைஞர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் ஒரு முடிவு" என்று பிரதமர் ஒரு ட்வீட்டில் கூறினார்.
நமது மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற தேர்வுகள் நம் இளைஞர்களை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு காரணமாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment