வட இந்தியாவில் சீறிப்பாயும் வீரமங்கை வேலுநாச்சியார் ரயில்... அசத்தும் இந்திய ரயில்வே... பின்னணி என்ன?
இந்திய ரயில்வே தமிழகத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், முதல் இந்திய பெண் சுதந்திரப் போராளி ராணி வேலுநாச்சியாரை சிறப்பிக்கும் வகையில், ரயில் என்ஜின் ஒன்றுக்கு அவரஅது பெயரை வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான பதிவுகள் வெளியான நிலையில், இது உண்மையான பொய்யா என சிலர் கேட்டதன் அடிப்படையில் இது குறித்த தேடலில், ராணி வேலுநாச்சியார் உட்பட, இந்திய விடுதலை வரலாற்றில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத சில வீர மங்கைகளின் பெயர் ரயில் என்ஜினுக்கு சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
யார் இந்த வேலு நாச்சியார்?
தென்னாட்டின் ஜான்சி ராணி என நமது தமிழக வராலற்றில் சொல்லப்பட்டாலும், ஜான்சி ராணி லக்ஷ்மிபாயிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையினரை ஓடஓட விரட்டியவர் ஆவார்.
1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்து செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும் சக்கந்தி முத்தாளுக்கும் மகளாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே மிகவும் வீரத்துடன் விளங்கிய வேலு நாச்சியார் அனைத்து போர்கலைகளிலும் தேர்ச்சி பெற்றதோடு, பிரெஞ்சு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பன்மொழி திறமை கொண்டவர் ஆவார்.
பின்னர் சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாத உடையத் தேவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையினருடன் நடந்த மோதலில் கணவர் உயிரிழந்துவிட, ராணி வேலு நாச்சியார் குழந்தையுடன் தப்பித்து தலைமறைவு வாழ்க்கையை சில காலம் வாழ்ந்தார்.
இந்த காலத்தில், சிவகங்கையின் ராணுவத்தை மருது நாயக்கர்கள் மற்றும் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவியுடன் வலிமையாக்கி, பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை ஓடஓட விரட்டியடித்து 1780 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி சிவகங்கையின் ராணியானார்.
தொடர்ந்து 10 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் 1790 ஆம் ஆண்டு நாட்டை மகள் வெள்ளச்சியின் கையில் ஒப்படைத்து, அவர்களுக்கு உதவியாக மருது நாயக்கர்களையும் நியமித்து ஆட்சிப் பொறுப்புகளில் இருந்து விளக்கியுள்ளார். பின்னர் 1796 ஆம் ஆண்டு காலமானார்.
1857 ஆம் ஆண்டின் முதல் இந்திய சுதந்திரப் போரில் தீரத்துடன் பிரிட்டிஷாரை எதிர்த்த ராணி லட்சுமிபாய்க்கு கிடைத்த முக்கியத்துவத்தில், பிரிட்டிஷாரை ஓடஓட விரட்டியடித்த ராணி வேலுநாச்சியாருக்கு கிடைக்கவில்லை எனும் மனக்குமுறல் தமிழர்களிடையே நீண்டகாலமாக உள்ளது.
ரயில் எஞ்சினுக்கு ராணி வேலுநாச்சியாரின் பெயர்
இந்த ஆண்டு மார்ச் 8 அன்று உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, இந்திய பெண்களை போற்றும் வகையில், இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே பிரிவு, இந்தியாவின் வீர மங்கைகளை போற்றும் வகையில், சிவகங்கை சீமையின் ராணி வேலு நாச்சியார், கிட்டூர் ராணி சென்னம்மா உள்ளிட்ட பலரின் பெயர்களை ரயில் என்ஜின்களுக்கு வைத்து சிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.
பேஸ்புக் பதிவைக் காண - இங்கு கிளிக் செய்யவும்
ட்விட்டர் பதிவைக் காண - இங்கு கிளிக் செய்யவும்
மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வே வடக்கு பிராந்திய ரயில்வே பிரிவு, இந்திய வரலாற்றில் நீண்டகாலமாக கண்டுகொள்ளப்படாத வீர மங்கைகளின் பெயர்களை ரயில் என்ஜினுக்கு சூட்டியுள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment