பயிற்று மொழியாக தாய்மொழியைத் திணிக்கும் மத்திய அரசு? : புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட நபர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது கடந்த மே 31'ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவே இந்த புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்  இதை இந்தித் திணிப்பு என்று சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர்.

திராவிட அரசியல்வாதிகள் இதைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் மக்களிடையே இந்தித் திணிப்பு என திரும்பத் திரும்ப பேசி உணர்ச்சியை தூண்டிக் கொண்டே இருந்ததால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "மத்திய அரசிற்கு எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை. அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அரசு செயல்படுகிறது" என அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து மும்மொழிக் கொள்கையை இந்தித் திணிப்பு என தவறாக அர்த்தப்படுத்தி பேசுவதால் அந்த பகுதியை நீக்கி திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இப்படி தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு இந்தித் திணிப்பைப் பற்றி மட்டுமே பேசுவதால் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் உள்ள புதிய அம்சங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இங்கு ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை.

எனவே வரைவு அறிக்கையை நாமே படிப்போம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்ததில் நான் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியும் அடைந்த தகவல் ஒன்றை இங்கே உங்களுக்காக பகிர்கிறேன்.

அது பயிற்று மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரையைப் பற்றியது தான்.


மொழிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடும் இந்தப் பகுதியில் தான் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்ட இந்தித் திணிப்பும் அடங்கியிருந்தது.

இதில் பயிற்று மொழியாக என்ன மொழி இருக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்ததை இங்கு தமிழ்ப்படுத்துகிறேன்.

பொதுவாக குழந்தைகள் தங்களுடைய தாய் மொழியில் கல்வி கற்கும் போது முக்கிய கருத்துக்களை எளிமையாக புரிந்து கொள்வர். ஆனால் மாணவர்கள் கற்றுக் கொள்ள தொடங்கும் போதே தாங்கள் பயன்படுத்தாத மொழியின் மூலம் கல்வியைத் தொடங்குவதால் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சிந்திக்கும் திறன் மழுங்கிப் போய்விடுகின்றது. மற்றொரு பக்கம் அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு இந்திய உள்ளூர் மொழிகளில் ஒரு சில புத்தகங்கள் இருந்தாலும் அவை மூல நூலான ஆங்கிலத்தில் எழுதப்பட்டதற்கு நிகரான தரத்தில் இல்லை. இதை மாற்றி இந்திய உள்ளூர் மொழிகளில் தரம் வாய்ந்த புத்தகங்களை வல்லுனர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் கொண்டு உருவாக்குவது அவசியம். மேலும் உள்ளூர் மொழிகளில் பயிற்றுவிக்க தரமான ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


குறைந்தபட்சம் 5'ம் வகுப்பு வரையாவது பயிற்று மொழியாக தாய் மொழி இருப்பது அவசியம். ஆனால் 8'ம் வகுப்பு வரை தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்டிருப்பது நலம். அதற்கு பிறகும் தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொள்ள வாய்ப்பு இருந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு நல்ல தரமான பாடப்புத்தகங்கள் உள்ளூர் மொழியில் ஏற்படுத்திட வேண்டும். இதற்கு இந்திய மொழிபெயர்ப்பு குழு மற்றும் அதற்கு நிகராக மாநிலத்தில் உள்ள குழுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்கள் இல்லையெனினும் வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். மாநில மொழியில் புத்தகங்கள் இருந்தாலும் பழங்குடியினர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களின் தாய் மொழியில் கல்வி கற்பிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் பயிற்று மொழியாக அவரவர் தாய்மொழியை கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. இங்கு நான் அழுத்தி குறிப்பிட விரும்புவது "பரிந்துரைக்கிறார்கள்" என்பதையே.

அப்படி பயிற்று மொழியாக தாய்மொழியைக் கொண்டிராதவர்களுக்கு என்று சில பரிந்துரைகளையும் கொடுத்திருக்கிறார்கள். இதை நான் இங்கு குறிப்பிடக் காரணம் என்னவெனில், அறிக்கையின் ஒரு சிறு பகுதியை தனியாக எடுத்து இந்தித் திணிப்பு என தவறாக வழிநடத்தியதைப் போல, இதை பயி்ற்று மொழியாக தாய்மொழித் திணிப்பு என நீங்கள் தவறாக எண்ணி விடக் கூடாது எனும் நோக்கில் மட்டுமே.

சில காலம் முன்பு மத்திய அரசு தமிழ்நாட்டில் கொண்டு வர இருந்த நவோதயா பள்ளிகளில் கல்வி முறை எப்படி இருக்கிறது என்றால் மேற்சொன்ன முறையில் தான் உள்ளது.

நவோதயா பள்ளிகளில் 8'ம் வகுப்பு வரை பயிற்று மொழியாக மாநில மொழியும் ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடமாகவும் மூன்றாவது விருப்ப மொழியையும் கொண்டுள்ளது. பெரும்பான்மையினர் இந்தியைத் தேர்வு செய்கிறார்கள் என்பது வேறு விசயம். ஆனாலும் அது விருப்பப்பாடம் மட்டுமே.

நாம் என்ன செய்தோம். வழக்கம் போல மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு என இங்கு நடக்கும் உணர்ச்சி அரசியலுக்கு அடிமையாகி அதை எதிர்த்தோம்.

ஆக இங்கு நடக்கும் அரசியல் என்பது இந்தித் திணிப்பு என அரசியல் செய்து அரசியல் இலாபம் அடைவது மட்டுமே. நாமெல்லாம் அவர்களின் நாடகத்தின் ஓர் அங்கம்.

இங்கு இந்தித் திணிப்பு என அரசியல் பேசும் எந்த கட்சிக்கும் உண்மையான தமிழ் வளரச்சியைப் பற்றியோ கல்வி மேம்பாடு பற்றியோ அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆரம்பக் கல்வி முதல் அனைத்துக் கல்விக்கும் பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும்.

கல்வி வளர்ச்சி, தாய் மொழி மீது உண்மையான அக்கறையுள்ள அனைவரும் இந்த வரைவு அறிக்கையை முழுவதுமாக படித்து தங்களுடைய மேலான கருத்துக்களை nep.edu@nic.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

வரைவு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!