பிரிட்டன் எம்.பி'யே இந்திய பிரதமரை அசிங்கப்படுத்திவிட்டார் - மோடிக்கு இப்பவாவது உரைக்குமா?
சமீபத்தில் ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதில் பிரிட்டன் எம்.பி பீட்டர் போன், இந்திய மோடி அரசு 3000 கோடியில் பட்டேல் சிலையை கட்டியதை முட்டாள் தனமான செயல் என்று விமர்சித்துள்ளதாக அந்த மீம் கூறுகிறது.
இது தான் அந்த மீம்....
இப்படிப்பட்ட மீம்களையெல்லாம் பார்த்து உடனே உணர்ச்சிவசப்பட்டு அடடே, அருமை என்று பகிரக் கூடாது. மாறாக இது உண்மையா என்று ஆராய வேண்டும்.
ஆனா ஊனா இது பெரியார் மண்ணு டோய் என்று வாய் கிழிய கூவுகிறீர்களே, அந்த பெரியார் "நானே சொன்னாலும் நம்பக் கூடாது, உண்மையை ஆராய்ந்து பிறகு நம்புங்கள்' அப்படினு தான் சொல்லியிருக்கார்'ல. அத கொஞ்சம் மண்டையில ஏத்துங்க மக்களே....
சரி, நாம விசயத்துக்கு வருவோம். உண்மையிலேயே இந்த பீட்டர் போன் என்ற பிரிட்டன் எம்.பி இந்திய பிரதமர் மோடி பட்டேல் சிலை அமைத்ததை முட்டாள் தனமான செயல் என்றாரா?
இல்லவே இல்லை. அவர் சொன்னதன் சாராம்சம் வேறு. நம்மாளுங்க சினிமா மாயையில் இருப்பதால் கொஞ்சம் மசாலா தடவி, இது தான் உண்மை என்பதைப் போல் மீம் பரப்பி வருகிறார்கள்.
ஏன் அதன் சாராம்சம் வேறு என்பதற்குள் போகும் முன் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏன் நிதியுதவி வழங்குகிறது என்பதிலிருந்து தொடங்குவோம்.
நம் அனைவருக்குமே தெரியும், பிரிட்டன் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளை அடிமைப்படுத்தி தனது காலனியாதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த வரலாறு. ஆனால் 20ம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகள் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராடி தங்களது சுதந்திரத்தை பெற்றுக் கொண்டன. ஆனால் சுதந்திரம் பெற்றாலும் அவைகளின் பொருளாதாரம் மிகக் கொடுமையான நிலையில் இருந்தன. இதனால் அந்த நாடுகள்பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நஷ்ட ஈடு வேண்டும் என்று பிரிட்டன் உள்ளிட்ட காலனியாதிக்க நாடுகளிடம் கேட்டன.
அதன் காரணமாகத்தான் பிரிட்டன் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏழ்மையைப் போக்க நிதி உதவி வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் 1991 பொருளாதார தாராளமயமாக்கலும், அதற்கு பின்பு அடுத்த பத்தாண்டுகளில் நடந்த தொழில் வளர்ச்சியும் (குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள்) இந்தியாவை ஏழ்மையான நாடு என்ற நிலையிலிருந்து மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை உடைய நாடு என்ற நிலைக்கு கொண்டு வந்தது. மேலும் உலகின் மிக வலுவான பெரிய பொருளாதாரம், ஜி 20, பிரிக்ஸ் வங்கியின் முக்கிய பங்குதாரர் போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்றது.
மேலும் இந்தியாவே பல்வேறு ஏழை நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு நிதியுதவி அளிக்கத் தொடங்கியது. இவ்வாறு அளிக்கப்படும் நிதியுதவி ஒரு கட்டத்தில் இந்தியா பிரிட்டனிடமிருந்து பெறும் நிதியை விட அதிகமாயிற்று.
இது பிரிட்டனில் பெரிய அளவில் விவாதப் பொருளாகியது. மேலும் 2010களில் உண்டான பொருளாதார சீர்குலைவு பிரிட்டனையும் ஒரு காட்டு காட்டியதால் இந்தியாவிற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துமாறு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக அந்நாட்டின் கன்சர்வேடிவ் பார்ட்டி உறுப்பினர்கள் தான் அதிகம் கொந்தளித்தனர்.
இந்த கன்சர்வேடிவ் கட்சியினர் இந்தியாவை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள். உதாரணத்திற்கு ஒரு விசயம் மட்டும் கூறுகிறேன். பிரிட்டனில் உள்ள இரு பெறும் முக்கிய கட்சிகள் என்றால் லேபர் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி. இதில் கன்சர்வேடிவ் கட்சி என்பது நிலப் பிரபுத்துவ கட்சி என்றும், லேபர் கட்சி ஏழைகளுக்கானது என்றும் அறியப்பட்டது. இரணடாம் உலகப் போர் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கக் கூடாது என்றும், இந்தியர்கள் ஆட்சி செய்யும் திறன் அற்றவர்கள் என்றும் இந்திய சுதந்திரத்தை மிகக் கடுமையாக எதிர்த்த கட்சி. ஒரு வேளை இரண்டாம் உலகப் போர் முடிவில் லேபர் கட்சியின் கிளமண்ட் அட்லி வெற்றி பெற்று ஆட்சியமைக்காமல் இருந்திருந்தால் இந்திய சுதந்திரம் இன்னும் தாமதமாகியிருக்கும்.
இப்படிப்பட்ட கன்சர்வேடிவ் கட்சியினர் தான் இந்திய நிதியுதவியை மிகக் கடுமையாக எதிர்ப்பவர்கள். இது தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் அரசு தாங்கள் இந்தியாவிற்கு வழங்கும் நிதியுதவியை 2015ம் ஆண்டிலிருந்து முழுவதுமாக நிறுத்திவிட்டு அந்த நிதியை மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்தது. இதை வரவேற்ற அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சல்மான் குர்ஷித் "நாங்கள் நிதியை எதிர்பார்க்கவில்லை, வர்த்தகத்தையே எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஆனால் இதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் 2015ல் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசும் போது "பிரிட்டன் நிதியுதவி என்பது உண்மையில் உதவி அல்ல, 200 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்ததற்கான பிராயச் சித்தம் தான்" என்றார்.
ஆக, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியினர் ஏற்கனவே இந்தியாவிற்கு நிதி வழங்குவதை எதிர்த்துக் கொண்டு தான் உள்ளது என்பது தெளிவு.
சரிங்க, ஆனாலும் அந்த நாட்டு எம்.பி, மோடி பட்டேல் சிலை கட்டியது முட்டாள்தனமான செயல் என்று சொன்னது உண்மையா இல்லையா?
அவர் சொன்னதன் சாராம்சம் " இந்தியா 3000 கோடியில் சிலை கட்டுமளவுக்கு வலுவான நிலையில் உள்ளது, நாம் கொடுக்கும் நிதியை நம்பி அவர்கள் இல்லை. ஆகையால் பிரிட்டன் நிதியுதவியை முழுமையாக நிறுத்த வேண்டும்" என்ற கூறினார். கன்சர்வேடிவ் கட்சியினரின் கடந்தகால பேச்சுக்களையும், அவர்களின் இந்திய எதிர்ப்பு மனநிலையையும் மனதில் வைத்து பாருங்கள். உண்மை புரியும்.
பிரிட்டன் எம்.பி'யின் பேச்சைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உண்மையைத் தேடுங்கள். மாறாக இது போன்ற மீம்களை நம்பி ஏமாறாதீர்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Add your valuable comment