நரகாசுரரும் தீபாவளியும் - என்ன தான் பிரச்சினை இந்த தமிழ் மண்ணில் (பாகம் 1)

Guwahati view from Narakasura Hill

ஒவ்வொரு ஆண்டு தீபாவளி வரும் போதும் நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் ஒரு இனப் பிரச்சினையே சில தமிழ் தேசிய இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது.
உண்மையில் நரகாசுரர் ஒரு தமிழரா? தமிழ்ப் பிரதேசத்தை ஆண்ட மன்னரா? எதற்காக நரகாசுரரை முன் வைத்து தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இந்த இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது?

இவற்றையெல்லாம் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இந்த பதிவில் நரகாசுரரை பற்றி புராணங்கள், நாட்டுப்புற கதைகள், வரலாற்று எச்சங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன்.

நரகாசுரரை பார்க்கும் முன் அவர் ஆட்சி செய்த பிரஜ்யோதிஸ்பூருக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோம்!

பிரஜ்யோதிஸ்பூர் எங்க இருக்கு?

இன்றைக்கு கவுகாத்தி என்றும், குவ்காத்தி என்றும் நம்மால் அறியப்படும் அசாமின் தலைநகரம் தான் பண்டைய பிரஜ்யோதீஸ்பூர்.

பிரஜ்யோதீஸ்பூரை யார் ஆண்டார்கள்?

இலக்கியத் தகவல்களின் மூலம் பண்டைய அசாம் பகுதியை உள்ளடக்கிய பிரஜ்யோதீஸ்பூரை ஆண்ட முதல் வம்சம் தனவா வம்சம் என்பதும், முதல் அரசர் மகிரங்க தனவா என்பதும் அறியப்படுகிறது. இவர்கள் இமயமலையில் இன்றைய நேபாளம், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள், வங்காள தேசம், பர்மா போன்ற பகுதிகளில் அதிகமாக பரவியிருந்தவர்கள். இவர்களே இமயமலையின் பூர்வகுடிகள் என்றும், இவர்கள் கிரட்டா என்று அழைக்கப்பட்டனர் என்றும் மகாபாரதம், காளிகா புராணம், இராமாயணம் போன்ற இதிகாசங்களின் மூலம் அறியப்படுகிறது. இவர்களுக்கு சிவனே முதன்மையான தெய்வம்.
தமிழ்நாட்டில் முருகன் எப்படி வள்ளி என்ற வேடர்குலப் பெண்ணை மணந்ததாக சொல்லப்படுகிறதோ, அதே போல் இமயமலையில் சிவன் கிராட்டி எனும் வேடர் குலப் பெண்ணை மணந்தார். அவரே பின்னர் பார்வதியாக அறியப்படுகிறார் என்ற செவிவழிச் செய்திகள் இன்றும் அந்தப் பகுதிகளில் பேசப்படுகிறது. இந்த கிராட்டிகள் அம்பெய்வதில் மிகுந்த நிபுணர்களாக விளங்கியதால் அர்ஜுனன தன்னை கிரட்டா பழங்குடியாக மாற்றிக் கொண்டு இவர்களிடம் அம்பெய்யும் நுட்பத்தை கற்றுக் கொண்டதை கிரதார்ஜுனியம் என்ற காவியம் எடுத்துரைக்கிறது.
சரி இந்த தனவா வம்சத்திற்கு திரும்ப வருவோம்.
தனவா வம்ச அரசர்கள் (வரிசைக்கிரமமாக)
1. மகிரங்கா
2. ஹடகாசுரா
3. சாம்பராசுரா
4. ரத்னாசுரா
5.கட்டகாசுரா.

இதில் கடைசி மன்னன் கட்டகாசுரனை வீழ்த்தி அரச பொறுப்பை ஏற்றவர் தான் நரகாசுரா. இவர் தோற்றுவித்த வம்சம் பகுமா வம்சம்.

இங்கு முக்கிய விசயம் என்னவெனில் தனவா வம்சம் பற்றிய தொல்லியல் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ எதுவும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் நரகாசுரன் என்ற அரசர் இருந்ததற்கான வரலாற்றுப் பதிவாக பகுமா வம்சத்நிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வர்மா வம்ச அரசின் தாமிரப் பட்டயங்களில் குறிப்புகள் உள்ளது. இந்த தாமிரப் பட்டயங்களின் மூலம் பகுமா வம்சமானது இரும்புக் காலத்தைப் ஒட்டிய காலத்தில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தனவா வம்சமும் பகுமா வம்சமும் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லையெனினும், சிந்துசமவெளி நாகரீகம் சிறப்பாக விளங்கிய காலகட்டங்களில் அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு நாகரீக வளர்ச்சி அடைந்த சமூகம் இருந்ததற்கான எச்சங்கள் இந்திய தொல்லியல் துறை அசாமில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மீதிய அடுத்த பதிவில பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதருக்கும் பரவிய எச்10என்3 பறவைக் காய்ச்சல்..! உலகின் முதல் தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு..!

எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு : ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்.. சாதிக்கப்போவது என்ன?

லோன் ஆப் முதல் ரம்மி விளையாட்டு வரை..! சீனாவின் சித்து விளையாட்டுகளை தகர்த்தெறியும் இந்தியா..!